என்னைப் பிரிந்துவிட்ட என்னருமைச் சொந்தமொன்றுக்காக இக்கவிதையை இங்கே அர்பணிக்கிறேன்....
பாலமிட்ட உறவுநிலா பாலைநதி அலையாக
காலவெளிச் சோலைகளில் கலக்கமலர் பூத்ததென்ன!
எண்ணச் சிறகுகளை எவர்வெட்டிப் போட்டாலும்
கண்ணில் பழையநிலா கவிபேசத் தவறவில்லை.
சாகாத நினைவே தங்கமே! இந்நாளில்
நோகாமல் என்னெஞ்சை நூல்போட்டுச் சுமக்கிறது
இன்னும் மனக்குளத்தில் ஏக்கப் படகுவர
என்னை நினைப்பாயோ? எண்ணாமல் இருப்பாயோ?
அந்தப் பனிநாட்கள் ஐயோ ! என் கற்பகமே!
எந்தப் பிறவியிலே எப்போது இனிவருமோ?
தொட்டுப் படிக்காத தொடர்கதையே! ஏனம்மா
விட்டு விலகி வெகுதூரம் போய்விட்டாய்?
போனகதை போனதென்றா பூமியிலே நானிருப்பேன்?
ஏனம்மா தெரியாதா? இருக்கிறதே ஓரிதயம்!
உன்னினைவுச் சுமையென்றன் ஒளிநெஞ்சில் இல்லையென்றால்
என்னிதயம் என்னிதயம் எப்போதோ கனத்திருக்கும்.
இதயவிழி தனைமெல்ல எண்ண இமை மூடட்டும்!
வதங்கிவிட்ட மலர் போல்என் வாழ்நாளும் முடியட்டும்!
அங்கும் என் அழகே! உன் அன்புரசப் பிஞ்சுமுகம்
மங்காமல் மின்னியென்றன் மடிமீது மலரட்டும்!
- நன்றி : வைரமுத்துவின் "வைகறை மேகங்கள்"
No comments:
Post a Comment